top of page

புவியியல் :

குமரி மாவட்டமானது  முன்பு   நூற்றுக்கணக்கான   நீர்நிலைகள்  மற்றும்  சிறந்த  வாய்க்கால்  விவசாயம்  ஆகியவற்றின்  மூலம்  திருவிதாங்கூரின்  களஞ்சியம்  என  அழைக்கப்பட்டது.  ரப்பர்  மற்றும் நறுமணப் பொருள்கள்  மலைச்சரிவுகளிலும்  நெல், வாழை, தென்னை ஆகியன கடற்கரையை  ஒட்டிய  சமபூமிகளிலும்  பெருமளவில் காணப்படுகின்றன.  இங்கு  பொதுவாக மலை சார்ந்த  பகுதிகளாகவும்,  கடற்கரையை  ஒட்டிய  பகுதிகளில்  சமபூமியாகவும்  காட்சியளிக்கிறது.  நிலப்பரப்பின் உயரம் கடற்கரையிலிருந்து மேற்குத் தொடர்ச்சி  மலைகளை நோக்கி  மெதுவாக உயர்கிறது.  இம்மாவட்டதிற்கு  62 கி.மீ  மேற்குக் கடற்கரையும்,  6 கி.மீ கிழக்கு  கடற்கரையும்   உள்ளன.   இதன்  நிலப்பகுதியில்  48.9% விவசாய  நிலமாகவும்,  32.5% அடர்ந்த காட்டுப் பகுதியாகவும் இருக்கிறது.

 

மாவட்டத்தின் கடற்கரைகள்  பல பாறை  மயமாகவும்  மற்றவிடங்கள்  வெள்ளை  மணற்பகுதியாகவும்  காணப்படுகின்றன. கிழக்கு   கடற்கரைகளில்   பவழப்பாறைகளின்   அம்சங்கள்  (பெரும்பாலும் அழிந்திருந்தாலும்)  பல   காணப்படுகின்றன.  பல வகையான  வண்ண  சங்கு  வகைகளும்  காணப்படுகின்றன. மேலும்  சில  கடற்கரைப்  பகுதிகளில்  காணப்படும்  மணல் தாது வளம்  நிறந்ததாக  இருக்கிறது.

தட்பவெப்ப நிலை :

கடந்த   ஐம்பது  ஆண்டு  கால ஆய்வில்,  வடகிழக்கு  பருவக்காற்று  வீசும்  அக்டோபர்  மாதம் முதல்  டிசம்பர்  மாதம்  வரை,   24 மழை  நாட்களில் 249 மி.மீ மழையும்,  தென்மேற்கு பருவக்காற்று  வீசும் ஜூன்  முதல் செப்டம்பர்  மாதம்  வரை 27 மழை நாட்களில் 537 மி.மீ. மழை பெய்திருக்கிறது.  இதுவே மார்ச் முதல் மே  மாதம்  வரையிலான  வேனில் காலத்தில் 11 மழை நாட்களில் 332 மி.மீ மழையும்  பதிவாகி  இருக்கிறது. மாவட்டத்தின்  ஒரு ஆண்டு சராசரி மழை 1465 மி,மீ. இதில் அக்டோபர் மாத அளவான 247 மி.மீ  அதிகபட்சமாகவும்,  பெப்ரவரி மாத  அளவான 21 மி.மீ  குறைந்தபட்சமாகவும்  இருக்கிறது. மாவட்டத்தின்  ஈரப்பதம் 60 முதல்  100 சதவிகிதமாக  இருக்கிறது.

ஆறுகள் :

கன்னியாகுமரி மாவடத்தில்  முக்கிய நதிகள் தாமிரபரணி, வள்ளியாறு, பழையாறு ஆகியன ஆகும்

தாமிரபரணி :

இந்நதி குழித்துறையாறு என பரவலாக அறியப்படுகிறது. இதற்கு இரண்டு துணை ஆறுகள் உள்ளன. அவை கோதையாறு மற்றும்  பரளியாறு  ஆகியன.  இவைகள்  முறையே  பேச்சிப்பாறை  மற்றும் பெருஞ்சாணி  அணைக்கட்டுகளிலிருந்து வருகின்றன. மேலும் கோதையாறு ஆற்றுக்கும் இரண்டு துணை ஆறுகள் உள்ளன. இவைசிற்றாறு - 1, மற்றும் சிற்றாறு - 2 ஆகும்.  மேற்குத்  தொடர்ச்சி  மலையில்  உற்பத்தியாகும்   இந்தத்  தாமிரபரணி  கன்னியாகுமரிக்கு 56  கி.மீ  மேற்காக அமைந்திருக்கும்  தேங்காய்ப்பட்டணம்  என்னும்  சிற்றூரில்  அரபிக் கடலில்  கலக்கிறது.

வள்ளியாறு :

இவ்வாறும்  இதன்  ஒரு துணை  ஆறாகிய தூவலாறும்,  வேளிமலை  மலையில்  உற்பத்தியாகி,  பி.பி.கால்வாய்,  மற்றும் அதன் பிரிவுக்  கால்வாய்களிலிருந்தும்  வரும்  ஓடைகளின்  நீரையும்  வாங்கிக்கொண்டு,  மணவாளக்குறிச்சி  அருகே அரபிக்கடலில் கலக்கிறது.

பழையாறு :

இவ்வாறு  நாகர்கோவிலுக்கு 18 கி.மீ  வடமேற்காக   அமைந்திருக்கும்   சுருளகோடு   என்னும்  சிற்றூரில்   தொடங்குகிறது.  இது  தோவாளை,  அனந்தன் நகர்,  மற்றும் என்.பி. கால்வாய்களின்  ஓடைகளின் நீர்களை  வாங்கும் ஒரு ஓடையாறாகவே இருக்கிறது.  மணக்குடியில்  கடலில்  கலக்கிறது.

தாவர மற்றும் விலங்கு வகைகள் :

கீரிப்பாறை பகுதிகளில் பல வகைப்பட்ட பேரணிச் செடிகளையும் பல வெப்பமண்டல தாவர வகைகளையும் பார்க்க முடியும். பேச்சிப்பாறை  பகுதிகளில்  சிவப்பு மற்றும்  இளஞ்சிவப்பு  இலைகளியும்  பூக்களையும்  உடைய  மரங்கள்,  பச்சை  படர்ந்த காட்டுப்பகுதிகளுக்கு  மத்தியில்  ஜொலிப்பதை  பார்க்க முடியும். 

 

குமரி மாவட்டத்தில்  காணப்படும்  விலங்குகளில்  முள்ளம் பன்றி,  காட்டுப்  பன்றி,  பல்லி  வகைகள்,  பல  இன கொக்கு, நாரை, நீர்க்கோழி, மலைப் பாம்பு, பல வகைப் பாம்புகள்உட்பட பல வகைப்பட்ட ஊர்வன ஆகியவை அடங்கும்.மேலும் மகேந்திரகிரி மலையில் (கடல் மட்டத்திலிருந்து 4000 அடி உயரத்துக்கு மேல்) முயல்கள், மான்கள்,சிறுத்தை ஆகியவற்றை காண முடியும். அதன்   அருகாமையிலுள்ள   நெடுஞ்சாலையில்   சிறுத்தை  குட்டிகள்  சாதாரணமாக  வந்து  போவதை  பார்க்க முடியும். கீரிப்பாறைசார்ந்த  பகுதிகள்  யானைகள்,  காட்டு எருமை,  கரடி  போன்ற  விலங்கினங்களின்  உறைவிடமாகத் திகழ்கிறது. தேரூர்  பகுதியில்  பல  வகையான  கொக்குகளை சில  குறிப்பிட்ட  காலச் சூழல்களில்  பார்க்க முடியும்.

மருத்துவ வரலாறு :

குமரி மாவட்டத்துக்கு  இயற்கை  பல அரிய மூலிகை  வகைகளையும்  தாது  வளங்களையும்  தாங்கும்  மலைகளையும் நன்கொடையாகத் தந்திருக்கிறது. கன்னியாகுமரிக்கு  அருகாமையில்  அமைந்திருக்கும்  மருந்துவாழ் மலை அசோகர்காலகட்டத்தில் வாழ்ந்த புத்த பிக்குக்களால் மருத்துவ மற்றும்  ஆன்மீக  பாரம்பரியம்  உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இம்மலை இராமருக்கும் இராவணனுக்கும் இடையில் நடந்த காப்பிய யுத்தத்தின் போது, அனுமன் சுமந்து சென்ற Gandha Madhana  மலையின் உடைந்து  விழுந்த பகுதியாக இதன் புராணாக் குறிப்பு கூறுகிறது. இம்மலையில் பல அரிய வகை மூலிகைகள் அதிக அளவில் உள்ளன.

 

மேலும்  மருத்துவம், இலக்கணம் மட்டுமல்லாமல் வர்ம சாஸ்திரத்திலும் அகத்தியர் திறம்படைத்தவராவார். பிரபல பனை ஓலை  எழுத்தாக்கங்களான  வர்மாணி, வர்ம சாஸ்திரம் ஆகியன  அவரால் இயற்றப்பட்டவைகளாகும். இன்றும் இந்த வர்ம வைத்திய முறைகள் கன்னியாகுமரிப் பகுதிகளில் குரு-சிஷ்ய முறையில் கற்பிக்கப்படுகிறது. மேலும் இந்த தமிழ் வைத்திய முறையை பயன்படுத்தி இத்துறையில் வல்லுனர்களால் மருத்துவம் செய்யப்படுகிறது.

 

பண்பாடு :

கன்னியாகுமரி  மாவட்டத்தில்  வாழ்கின்ற  மக்களின் முதன்மை மொழி  தமிழ் ஆகும்.   மலையாளம் பேசுகின்ற சிறுபான்மையோரும் உள்ளனர்.

சமயம் :

இந்துக்கள் மற்றும்  கிறித்தவர்கள்  இம்மாவட்டத்தில்  கணிசமான  சதவிகிதத்தில்  உள்ளனர்.  மேலும் இஸ்லாமியப் பெரும்பான்மை மண்டலங்களும் இங்கு உண்டு . இம்மாவட்ட  கிறிஸ்தவர்களின் சதவிகிதம், அவர்களின் தேசிய சதவிகிதத்தை விட அதிகம். 2001 மக்கள் தொகைக் கணககுப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறித்தவர்கள் 51.27%, இந்துக்கள் 44.47%,  இசுலாமியர் 4.20%, பிறர் 0.057% உள்ளனர்.

 

பத்தொன்பதாம்  நூற்றாண்டில்  தோன்றிய  சமயமான  அய்யாவழியின்  பிறப்பிடமும்  கன்னியாகுமரி  மாவட்டமாகும். மேலும் இச்சமயத்தினரால் மொத்த குமரி மாவட்டமே புனிதமாக கருதப்படுகிறது.மேலும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், குறிப்பாக தற்போது குமரி மாவட்டமாக உள்ள தென் திருவிதாங்கூரில் கிறிஸ்தவ மறைபரப்பாளர்கள் ஆங்கில கல்வியின் முன்னோடிகளாக திகழ்ந்தனர். இங்கு ஏற்பட்ட கல்வியறிவின் வளர்ச்சியாலும் இதர காரணங்களாலும் சாதி முறை பெருமளவில்  வலுவிழந்து  காணப்படுகிறது.

 

குமரி மாவட்டத்தின் மக்கள் சாதி, மத இன, வேறுபாடுகளின்றி பழகுகின்றபொழுதும் இங்கு 1980 களில் இங்கு பெரிய அளவில் மதக்கலவரம் வெடித்தது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசி கொடை விழாவின் போது இந்துக்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் வெடித்த இக்கலவரம், பல்வேறு விதங்களில் பரவிய வதந்திகளின் காரணமாக பரவியதாகத் தெரிகிறது. இக்கலவரத்தில் ராஜாக்கமங்கலம், ஈத்தாமொழி,பிள்ளைத்தோப்பு, நாகர்கோவில் ஆகிய இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. கலவரத்தை அடக்கும் விதத்தில் நடந்த இந்தத் துப்பக்கிசூட்டில் பல பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

பொருளாதாரம் :

தமிழ் நாட்டின்  மொத்த  ரப்பர்  உற்பத்தியில்  95% கன்னியாகுமரி  மாவட்டத்தில்  உற்பத்தியாகிறது.  

காற்றாலைகளுக்கு மாவட்டத்தின்  பொருளாதாரத்தில்  முக்கிய பங்கு  உண்டு.  ஆரல்வாய்மொழி பகுதியில்  இவை  அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாயம் :

முக்கிய பயிர்வகைகள்

1.     அரிசி - 400 ச.கி.மீ

2.     தென்னை - 210 ச.கி.மீ

3.     ரப்பர் - 194.78 ச.கி.மீ

4.     மரவள்ளிக்கிழங்கு - 123.50 ச.கி.மீ

5.     வாழை - 50 ச.கி.மீ

6.     பருப்பு - 30 ச.கி.மீ

7.     முந்திரி - 20 ச.கி.மீ

8.     பனை - 16.31 ச.கி.மீ

9.     மாம்பழம் - 17.70 ச.கி.மீ

10.    புளி - 13.33 ச.கி.மீ

11.    கமுகு - 9.80 ச.கி.மீ

12.    பலா - 7.65 ச.கி.மீ

13.    கிராம்பு - 5.18 ச.கி.மீ

கைவினைப் பொருட்கள் மற்றும் குடிசைத் தொழில் :

குமரி மாவட்டம் கைவினைப்  பொருட்களுக்கு  பெயர் போன  மாவட்டமாகும்.  குறிப்பாக  தோல்  நீக்கப்படாத தேங்காயில் செய்யப்படும்  குரங்கு  பொம்மைகள்,  தேங்காய் ஓடு  மற்றும்  மரத்தால் செய்யப்படும்  கைவினைப்  பொருட்கள்  ஆகியன முக்கியமானவை.  மேலும் சங்கினாலான  கைவினைப்பொருட்களும்  சிறப்பு வாய்ந்தவை.  தமிழகத்தின்  மொத்த கயிறு உற்பத்தியில் 28.4 சதவிகிதமும்  பாய் உற்பத்தியில் 61.5 சதவிகிதமும்  இம்மாவட்டத்தில்  உற்பத்தி செய்யப்படுகிறது.

ரப்பர் :

ரப்பர்  உற்பத்தி   குமரி மாவட்டத்தின்  பொருளாதாரத்தில்  முக்கிய பங்கு  வகிக்கிறது.   மாவாட்டத்தின்  மேற்குப்பகுதியில் கேரள எல்லையை ஒட்டிய பகுதிகளில் இவை அதிகமாக காணப்படுகின்றன. மேலும், நேந்திரம் பழம், செந்துளுவன், ரசகதளி, பாளயம்கொட்டான், துளுவம், மட்டி, உட்பட பல வகையான வாழைப்பழங்கள் இங்கு பயிரிடப்படுகின்றன. இவை மட்டுமல்லாமல், பலாப்பழம் (வரிக்கில மற்றும் கூளன்), மாம்பழம் (அல்போன்சா, பங்களோரா, நீலம், மற்றும் ஒட்டு) தேங்காய் ஆகியன இம்மாவட்டத்தின் விவசாய வளத்துக்கு பெருமை சேர்க்கின்றன. இவை தவிர ரோஜா, செவ்வந்தி, உட்பட பல மலர்களும் இங்கே பயிரிடப்படுகின்றன.

மீன் வளம் :

கன்னியாகுமரி மாவட்ட  கடல் பகுதிகளில் 200 - க்கும் மேற்பட்ட இன மீன்கள் கிடைக்கின்றன.

கல்வி :

கல்வியறிவு விகிதத்தில் (100%) குமரி மாவட்டம் தமிழகத்தில் முதலிடம் வகிக்கிறது. மேலும் கல்வித்தரத்திலும் முதலிடம் வகிக்கிறது.

குமரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் :

1.     மழலையர் பள்ளிகள் - 83

2.     தொடக்கப் பள்ளிகள் - 413

3.     நடுநிலைப் பள்ளிகள் - 147

4.     உயர் நிலைப் பள்ளிகள் - 121

5.     மேல் நிலைப் பள்ளிகள் - 120

6.     மொத்தம் 884

கல்லூரிகள் :

1.     அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் - 12

2.     சுயநிதி கல்லூரிகள் - 4

3.     Colleges for special education -8

4.     தொழில் கல்லூரிகள் - 20

5.     அரசு மருத்துவக்கல்லூரி - 1

6.     அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி - 1

 

                                                                                                                                                                                                                                                     

          நன்றி : விக்கிபீடியா

குமரி மாவட்டம்  பற்றிய ஒரு சின்ன அறிமுகம்

For More Travel Info..  Condact Us Now

S.Subash Kumar

+91 99 42 42 42 95

nanjilsubash@gmail.com

Find and Follow Us 

  • Blogger App Icon
  • Facebook App Icon
  • Google+ App Icon

Quick  Links 

Festival
Festival
Festival
Festival
Festival
Festival

If you don't know history, then you don't know anything.

           You are a leaf that doesen't know it is part of the tree!

bottom of page